ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த சுப்பிரமணியன்
என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணன், ஆனந்தி என இரட்டைக்
குழந்தைகள் பிறந்தன. மற்ற குழந்தைகளைப்போல அல்லாமல் இந்தக் குழந்தைகள்
பேசாமல், கூப்பிட்ட குரலுக்கு செவிமடுக்காமல் அமைதியாக இருந்தனர்.
குழந்தைகளுக்கு கேட்கும் திறனிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று
தெரிந்தது. கடைசியில்தான் அந்தக் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு
இருந்தது தெரிந்தது. ஆட்டிசத்துக்கு இதுவரை சிகிச்சை இல்லை. இந்தப்
பாதிப்பு உள்ள குழந்தைகளை மேலை நாடுகளில், உண்டு உறைவிடப் பள்ளியில்
சேர்த்துவிடும்படி அரசே பரிந்துரைக்கும்.
ஆனால், தன்னுடைய குழந்தைகளை அப்படி விட்டுவிட
மனமில்லாமல், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி
இறங்கினார் சுப்பிரமணியன். வாழ்க்கையே வெறுத்த நிலையில், குடும்பத்துடன்
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றார். அந்த நேரத்தில்தான், ஆட்டிசம்
பாதித்த குழந்தைகளுக்கு, சென்னையில் ஹோலிஸ்டிக் தெரப்பி எனப்படும் பல்வேறு
மருத்துவ முறைகள் மூலம் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதைக்
கேள்விப்பட்டார்.
உடனே
தன்னுடைய வேலையை உதறிவிட்டு, குடும்பத்துடன் சென்னை வந்தார். இரண்டு
குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு
குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம். தற்போது சுப்பிரமணியன் குடும்பத்துடன்
ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். குழந்தைகள் சாதாரண பள்ளியில் சேர்ந்து
படித்துவருகின்றனர். அங்கு நடத்தப்படும் போட்டிகளில் மற்ற குழந்தைகளுடன்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஹோலிஸ்டிக் முறையில் பயிற்சி
அளித்து வரும் சென்னை அண்ணாநகரில் உள்ள டாக்டரின் ஓரியன்டட் ஆர்ட் ஆஃப்
சிம்பயாடிக் ட்ரீட்மென்ட் அமைப்பின் (DOAST) இயக்குநர் டாக்டர்
கார்த்திகேயனிடம் பேசினோம்.
'ஆட்டிசம் ஒரு குறைபாடுதான். இது மனநல நோய் இல்லை.
இந்தக் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி, அமைதியாக இருப்பார்கள்.
தன்னிலை மறந்து கோபத்தோடு தன்னையும், பிறரையும் தாக்கும்போது அந்தக்
குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திக்குமுக்காடிப் போய்விடுகின்றனர்.
இந்தப் பேச்சுத்திறன் மற்றும் நடவடிக்கைக் குறைபாட்டுக்கு 'மதி இறுக்கம்’
அல்லது ஆட்டிசம் என்று சொல்வோம். இயல்பில் இருந்து விலகிய நிலை என்று இதைச்
சொல்லலாம்.
அமெரிக்காவின் கணக்குப்படி 125-ல் ஒரு குழந்தைக்கு
ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனால்,
விழிப்பு உணர்வு இல்லாததால், இந்தக் குழந்தைகள் அப்படியே
விடப்படுகின்றனர். பெரியவர்கள் ஆகும்போது இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்
ஏராளம்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கு சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான
குணாதிசயத்தில் பாதிப்பு இருக்கும். பேச மாட்டார்கள், மற்றவர்களோடு கண்
அசைவு போன்ற சைகை தொடர்பும் இருக்காது. கற்பனை உலகத்தில் இருப்பது போல
விநோதமாக நடந்துகொள்வார்கள். அம்மாவின் கண்ணைப் பார்த்துக்கூடப்
பேசமாட்டார்கள். கட்டி அணைக்கும் போது அதை விரும்பாமல் முதுகைத்
திருப்புவார்கள். ஒரு குமிழிக்குள் இருப்பது போல தங்களைத் தாங்களே
தனிமைப்படுத்திக்கொண்டு உலகத்தைவிட்டு விலகியே இருப்பார்கள்.
இதுதவிர, தங்களின் சுற்றுப்புறம், பொருட்கள் ஒரே
மாதிரியாக இருக்க விரும்புவர். அதில் மாற்றம் ஏற்படுத்தினால் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். தேவைகளை வெளிப்படுத்தத் தெரியாது. சாதாரண பேச்சு வழக்கில்
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். காரணம் இல்லாமல் அழுவது,
சிரிப்பது, வெறுப்பை வெளிப்படுத்துவது என்று இருப்பார்கள். அதிக
துறுதுறுப்பாகவோ அல்லது அதிமந்தமாகவோ இருப்பார்கள்.
உங்கள் குழந்தைக்கு இதில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்தால் உடனே 'நம்ம குழந்தைக்கும் ஆட்டிசம்
பாதிப்பு இருக்குமோ’ என்று பயப்படத் தேவையில்லை. இத்தகைய குணாதிசயம் கொண்ட
குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதித்து, மதிப்பீடு செய்த பிறகே முடிவு செய்ய
முடியும். குழந்தைக்குப் பிரச்னை இருப்பதை ஒன்றரை, இரண்டு வயதிலேயே கண்டறிய
முடியும். இந்தக் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த பயிற்சிகள் அளித்து
மற்ற குழந்தைகளைப்போல இவர்களையும் மாற்ற முடியும். ஆட்டிசத்துக்கு இதுதான்
சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. இதனால், எங்கே செல்வது என்று
தெரியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
1940-ல் இந்த நிலை கண்டறியப்பட் டது முதல் இதுவரை
தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு சிகிச்சை முறைகள்
பின்பற்றப்பட்டன. ஆனால், அவை எல்லாம் பெரும் பலனை அளிக்கவில்லை என்பதால்,
மாற்று மருத்துவ ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.
இந்தக் குழந்தைகளுக்கு மரபணுவில் இருக்கக்கூடிய
செயல்பாடு குறைபாட் டால் (Genetic susceptibility) சுற்றுப்புற சூழலில்
உள்ள மாசுக்கள் உணவுப் பாதையிலும், அதைத் தொடர்ந்து மூளையின் திசுக்களிலும்
பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைகளைத் தூண்டும் காரணிகளைக்
கட்டுப்படுத்தினால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கண்டறிந்தோம்.
2004-ம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யோகா,
இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கிறோம்.
இந்தக் குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு விலங்கிடமிருந்து பெறப்படும் பால், முட்டை
என எதுவும் கொடுக்கக்கூடாது. அசைவம், கோதுமை உணவு உள்ளிட்டவற்றைத்
தவிர்த்து விடுவோம். இதன்பிறகு உடலில் உள்ள நச்சுக்கள் ஆயுர்வேத முறைப்படி
வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் திசுக்களுக்குப் புத்துணர்வு கிடைத்து
புதுப்பித்துக்கொள்கின்றன. தினமும் ஆயுர்வேத சிகிச்சையுடன், சித்த
மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மேலும், ஆக்குபேஷனல் தெரப்பி, பேச்சுப்
பயிற்சி, குணங்களை மாற்றிப் பழக்கும் முறை போன்ற பயிற்சிகளை அளிக்கி றோம்.
இதன்மூலம் மூளைத் திசுக்கள் குணமாகி நல்ல பலனை அளிக்கிறது. சிகிச்சை
தொடங்கிய சில வாரத்திலேயே மாற்றத்தைக் காண முடியும்.
ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர் அனைவருக்கும் 'நமக்குப்
பிறகு நம் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற கவலை இருக்கும்.
ஆரம்ப நிலையிலேயே இந்தக் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம்,
குறைந்தது 18 வயதிலாவது அவர்கள் சுயமாக தங்கள் வேலையைச் செய்துகொள்ளும்
அளவுக்கு நிலையை உருவாக்க முடியும். மற்ற குழந்தைகளைப் போல பள்ளிக்குச்
சென்று படிக்க முடியும். இப்படி, அவர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும்
அனுபவித்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல
முன்னேற்றத்தைக் காண முடியும்'' என்றார்.
- பா.பிரவீன் குமார்
படங்கள்: ஆ.முத்துகுமார்
செய்ய வேண்டியவை
ஆரம்பநிலையிலேயே கண்டறியுங்கள்.
பிரச்னையை ஏற்று, ஆட்டிசக் குழந்தைகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.
இதற்கென உள்ள தனி பயிற்சி மையங்களை கண்டறிந்து சேர்க்கவேண்டும்.
குழந்தையுடன் பெற்றோர் கூட்டு முயற்சியாக இணைந்து பிரச்னையை எதிர்கொள்ளவெண்டும்.
செய்யக்கூடாதவை
குழந்தையின் பெற்றோர் ஒருவரை மற்றொருவர் குற்றம் சொல்லாதீர்கள்
மற்றவர்களைப் பற்றி துளி கூட கவலைப்படாதீர்கள்
புதிதாக மருந்து வந்துள்ளது என்று யாரோ சொல்வதைக் கேட்டு தேடி ஓடாதீர்கள்.
உடனடியாக குணமாகும் என்று நம்பி ஏமாறாதீர்கள்.
For
more details, visit:www.autism-ent-specialist-chennai.com